Thursday, March 17, 2011

அமேரிக்கா போகணும்னு......


ரொம்ப நாளா அமேரிக்கா போகணும்னு ஆசை.
தமிழக அரசியல் கூத்துக்களை இந்த குளிரில் பார்க்க சகிக்கவில்லை.
என் மனைவியிடம் சொன்னேன்- வெள்ளிக்கிழமை புறப்பட்டுப்
போய்விட்டு செவ்வாய்க் கிழமை திரும்பி வந்துவிடலாம் என்று.
உடனே சரி என்றாள்.எண்கள் தேவாலய நண்பர் ஒருவரைக் கேட்டோம் அவரும் சரி என்று புறப்பட்டார்.சின்சினாட்டில் உள்ள அவரது
சகோதரியை பார்க்க அவருக்கும் சந்தோஷம்தானே.
வெள்ளிக் கிழமை இரவு எண்கள் செவர்லெட் இம்பாலா கார் வின்சர் எல்லையை நோக்கி விரைந்தது.இடையில் ஒரு சின்ன காபி ப்ரேக்.
சுமார் பனிரெண்டு மணி அளவில் எல்லையை அடைந்தோம்.
ஒரு நதி அமெரிக்காவையும் கனடாவையும் பிரிக்கின்றது.
இந்தப் பக்கம் வின்சர்- அந்தப்பக்கம் டெட்ராய்ட் இரண்டுமே கார்
உற்பத்திக்குப் பேர் போனவை.
எங்களது பாஸ்போர்ட்களை காரில் இருந்தவாறே கொடுத்தோம்.
எட்டிக் கூட பார்க்கவில்லை. சில சம்பிரதாயக் கேள்விகளைக் கேட்டுவிட்டு அனுப்பிவிட்டான் அந்த அதிகாரி.
டெட்ராய்ட் (மோட்டார் நகரம்)

ஒரு இரண்டு மணி நேரம் பயணித்தவுடன் சாலை ஓரம் ஒதுங்கினோம்.
அமெரிக்க சாலைகளில் ஆங்காங்கே லாரிகள் ஓய்வெடுக்க வசதி செய்து கொடுத்திருப்பார்கள்.
நாங்கள் ஒருமணி நேரம் காரில் இருந்தவாறே தூங்கிவிட்டு-
பயணத்தை தொடர்ந்தோம்.காலை ஐந்து மணி அளவில் சின்சினாட்டி நகரில் சற்று உயரமான ஒரு பகுதியில் அமைந்திருந்த ஒரு பழமையான ஆனால் பெரிய வீட்டின் முன் எண்கள் கார் நின்றது.
உடனே வீட்டின் முன் விளக்குகள் எரிந்தது.
என்ன ஆச்சர்யம் - அந்த பெண்மணியும் அவரது மகனும்
எதிர்பார்த்து காத்து இருந்தார்கள்.
உள்ளே நுழைந்து எங்களுக்கு ஆயத்தப் படுத்தி இருந்த அறைக்குள்
நுழைந்து சற்று ஆசுவாசப் படுத்திக் கொண்டு ஹாலுக்குள் வந்தோம்.
டீ பரிமாறப் பட்டது. சற்று நேரத்திற்கெல்லாம் எழுந்து வந்த மற்ற பிள்ளைகளுடன் எனது பொழுது போக்கு துவங்கிற்று.

மாலையில் ஷாப்பிங். அழகான கென்உட் மாலுக்குள் நுழைந்து
நான் புதுமையான தேநீர் (சுமார் 2880  ரூபாய்) வாங்கினேன்.
எனது மனைவி ஆலிவ் பாடிலோசன் வாங்கினாள்.
இரவு சாப்பாடு ஒரு பஞ்சாபி ரெஸ்டாரன்ட்.
பின்னர் எட்டு மணிநேரம் ஆழ்ந்த தூக்கம்- நீண்ட நாழைக்குப் பின்.

காலையில் கிராஸ் ரோடு சர்ச் - என்ன பிரமாண்டம். எவ்வளவு வித்தியாசம்.! ஆங்காங்கே காபி பார் வைத்திருந்தார்கள்( இலவசம்)
காபியும் ஒரு பேனாவும் , சில நோட்டுக்களும் எடுத்துக் கொண்டு
சிலர் உள்ளே சென்றனர்.எனது மனைவி நம்ம ஊரில் சர்ச் செல்வது போல் நல்ல பிள்ளையாக சென்றால். என்னை வேறு கடிந்துகொண்டாள்.
கையில் காபி கப் வைத்திருந்ததற்கு.

உள்ளே நுழைந்தவுடன்தான் தெரிந்தது- அங்கே பெரும்பாலும் எல்லோரும் காபி வைத்திருந்தனர்.அதை வைப்பதற்கு வசதியும் செய்து கொடுத்திருந்தார்கள்.காபியை ருசித்துக் கொண்டே உள்ளே நடப்பவைகளைக் கவனித்துக் கொண்டிருந்தேன்.எல்லோரும் சாதாரண உடை அணிந்திருந்தார்கள். அந்த சபையின் போதகர் ஒரு ஜீன்ஸ் பான்ட் & டீ ஷர்ட் போட்டிருந்தார். நான் மட்டும்தான் சூட்.

ஒரு விஞ்ஞானி சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். கடவுளை விஞ்ஞானத்தின் மூலமாக அவருடைய பார்வை எல்லோரையும்
கைத்தட்ட வைத்தது. அடுத்து கேட்கப்பட்ட நாத்திக கேள்விகளுக்கு அவர் பதில் அளித்த விதம் மிக அருமை.

வெளியே வந்து இன்னுமொரு காபி- இலவசமாக -சுவையாக.
பிள்ளைகளை அவரவர் அறைகளில் இருந்து அழைத்துக் கொண்டு
GAP  outlet  சென்று ஒரு ஷாப்பிங். அங்கிருந்து கெண்டகி பயணம்.
சின்சினாட்டி ஒரு அழகான நகரம். ஆறு, மலை, பள்ளத்தாக்கு- எங்கும் செல்லும் சாலைகள்- சுத்தம், மக்களின் புன்னகை...இவை எல்லாம்
எங்களைக் கவர்ந்த விஷயங்கள்.

அமெரிக்க மாகாணத் தலைநகர்களில் ஒரு கிராமத்தைப் போல் தோற்றம் அழிப்பது கெண்டகி. மிகச் சிறிய ஊர். ஆனால் பெரிய வீடுகள்.
சரத், சௌமியா தம்பதிகள்- கர்நாடகாவை சேர்ந்த எங்கள் நண்பர்கள்.
அவர்களை சந்திக்க சின்சினாட்டியில் இருந்து சுமார் ஒன்றரை மணி நேர பயணம். உஷாதான் கார் ஓட்டினாள்- நாங்கள் சௌமியாவின் வீட்டை அடைந்தவுடன் சாப்பாடுதான்.
கெண்டகி (குதிரைகளுக்கு பெயர் போனது)
வகை வகையாக சமைத்து வைத்திருந்தாள். சௌமியா ஒரு வக்கீல்- ஆனால் சமையலில் மிக ஆர்வம். அவள் டொராண்டோவில் இருந்தபோது
தினமும் எங்களுக்கு விருந்துதான்.

மூக்குமுட்ட சாப்பிட்டுவிட்டு- நான் ஒரு தேநீர் தயாரித்தேன். எல்லோரும் பருகிவிட்டு திரும்பவும் சின்சினாட்டி பயணம். இரவு நிரம்ப விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தோம். உஷாவின் கணவர் ஒரு வெள்ளைக்காரர்- அவர் ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தார். உற்சாகத்தில் குக்கி (இனிப்பு) தாரிக்க ஆரம்பித்து விட்டார். ஒரு அழகான தூக்கத்திற்குப் பின் அதிகாலையில் புறப்பட்டோம் கனடா நோக்கி.

இனி, விரைவில் அடுத்த பயணம் அமெரிக்காவிற்குத்தான்.

No comments:

Post a Comment