ஹலோ- தொண்டர்களே!
நான் உங்கள் மனசாட்சி !!
தங்கபாலு வைத்திருக்கிறாரே வீடுகள், தொலைக்காட்சி அலுவலகம்... அங்கே போய் ஆர்ப்பாட்டம் நடத்தினால் புரிந்துகொள்ள முடியும்! குலாம் நபி ஆசாத் டில்லியில் இருக்கும் வரை தங்கபாலுவை ஒன்றும் செய்துவிட முடியாது. தமிழே தெரியாத, தமிழகத்தில் எந்தத் தொகுதி, எங்கேயிருக்கிறது என்று தெரியாத அகமது படேல்களும், குலாம்களும் இருக்கிற வரை இது தான் நிலைமை.
தி.மு.க., கூட்டணி இல்லை என்றவுடன் வெடி போட்டுக் கொண்டாடினீர்களே... என்ன ஆயிற்று? குலாமும், தங்கபாலுவும் தான் வேலையை முடித்துவிட்டனரே. உங்களால் சோனியா அவமானப்பட்டது தான் மிச்சம். யாரைப் பதவியில் அமர்த்த? நேருவை, கர்நாடக இசைப் புலி, எம்.எஸ்.சுப்புலட்சுமியோடு, இணைத்து மேடைகளிலே அசிங்கமாகப் பேசிய, கருணாநிதியைப் பதவியில் அமர்த்த!
இந்திராவைக் கடுமையாக எதிர்ப்பவர்களா இருந்தும், வாஜ்பாய், அத்வானி போன்ற தலைவர்கள் எல்லாம் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தியபோது, அஞ்சலி செலுத்தாத, இந்திராவின் சாம்பல் வந்தபோது, அதற்குக் கூட அஞ்சலி செலுத்தாத, கருணாநிதியை பதவியில் அமர்த்த. பிரதமர் ஆவதற்காக, ராஜிவ் மீது பெரிய பழி சுமத்தி, பதவி போகப்போகிறது என தெரிந்ததற்குப் பிறகு, பிற்படுத்தப்பட்ட மக்களின் காவலனாக வேடம் போட்ட வி.பி.சிங்கைத் தமிழகத்துக்கு கூட்டி வந்து, ராஜிவிற்கு எதிராக அசிங்கம் அசிங்கமாகக் குற்றம் சுமத்திய கருணாநிதியைப் பதவியில் அமர்த்த!
வாசனுக்கு நினைவுபடுத்துகிறேன்... மூப்பனார் தலைமையில் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தைத் திறந்துவைத்த ராஜிவ், அன்று தமிழக மக்களுக்கு வைத்த வேண்டுகோள் என்ன என்று... பழைய பெரியவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். இல்லையெனில், பத்திரிகைகளின் பழைய இதழ்களை எடுத்துப் பாருங்கள். "தி.மு.க.,வை வேரோடு, வேரடி மண்ணோடு பிடுங்கி எறியவேண்டும் என்று உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்' இதுதான் தமிழகக் காங்கிரசாரிடம், ராஜிவ் வைத்த கடைசி வேண்டுகோள். ராஜிவ் கலந்து கொண்ட கடைசி நிகழ்ச்சி, சென்னை கத்திப்பாரா சந்திப்பில், எம்.ஜி.ஆர்., தலைமையில், நேரு சிலையைத் திறந்து வைத்தது.
அங்கே எம்.ஜி.ஆர்., சொன்ன வரி ஒன்றே தான், "என் உயிர் காத்த தலைவனே! நான் உன் தாத்தா நேருவின் தொண்டன். இந்திராவின் அன்புத் தோழன்; உனது உற்ற நண்பன். உனக்கும், உனது குடும்பத்திற்கும், உனது காங்கிரஸ் இயக்கத்திற்கும், நானும், எனது ரத்தத்தின் ரத்தமான உடன் பிறப்புக்களும் என்றும் நன்றியாக இருப்போம்' என்றார். அந்த ராஜிவின் சாம்பல் சென்னை வந்ததே. அதற்கு அஞ்சலி செய்யப்போனாரா கருணாநிதி? இன்று, "எம்.ஜி.ஆர்., எனது நண்பர். என்னை முதல்வராக்கியவர்' என்கிறாரே. அன்று தமிழகத்தின் ஏழை, எளிய மக்களெல்லாம் எம்.ஜி.ஆரைக் காப்பாற்ற கோவில் கோவிலாக சென்றார்களே அவர்களின் வேண்டுதலாலும், ராஜிவின் சீரிய கவனிப்பாலும் தமிழகம் வந்தாரே எம்.ஜி.ஆர்., தேர்தலில் தோற்றதும், அந்தக் கொடிய நோயை, சாவு நோவு என்று கேலி செய்தவர் தானே கருணாநிதி.
நெல்லைக் கண்ணன் - நன்றி-தினமலர்
No comments:
Post a Comment